சிறாரைப் பாதிக்கும் ‘தக்காளிக் காய்ச்சல்’: சுகாதாரத்துறை எச்சரிக்கை

1 mins read
b1d1fa1d-0f13-456b-87c0-676e33524d3e
கோடைக் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சுகாதாரமின்மையால் ஏற்படும் ‘தக்காளிக் காய்ச்சல்’ சிறாரை அதிகம் பாதிப்பதாகத் தமிழகப் பொதுச் சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தோலில் சிவப்பு நிற அரிப்புடன் ஏற்படும் தக்காளிக் காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பதால் எச்சரிக்கை அவசியம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

கோடைக் காலத்தில், தமிழகத்தில் பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

கோடைக் காலத்துக்கே உரிய ‘மெட்ராஸ்-ஐ’ கண் பாதிப்பால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தைவிட, 20 விழுக்காட்டினர் இந்தக் கண் பாதிப்பால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தக்காளிக் காய்ச்சல் புதுத் தலைவலியாக உருவாகியுள்ளது.

இக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்க்கு முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால் பாதங்களில் கொப்பளம், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

“காய்ச்சலைத் தவிர்க்க அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.

“பள்ளி செல்லும் சிறார், அவ்வப்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம்,” என்று திரு குழந்தைசாமி கூறியுள்ளார்.

இக்காய்ச்சல் ஒரு வாரத்துக்குள் தானாகச் சரியாகிவிடும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்