சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் சுமை ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் சுமையைப் பார்க்கும்போது தமிழகம் மற்ற மாநிலங்களைக் கடந்து முதல் இடத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், நிதிக் குழு பரிந்துரை செய்யும் வரம்புக்குள்தான் கடன் வாங்குவதாகத் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் மொத்தப் பொருளியலில் தமிழகத்தின் பங்கு 9 விழுக்காடாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியில் சராசரியைவிட தமிழகம் அதிகம் வளர்ச்சி கண்டு வருவதாகக் கூறினார்.
“ஒரு மாநிலம் தனது மொத்த பொருளியல் மதிப்பில் 28 சதவீதம் வரை கடன் வாங்க நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. அந்த வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்.
“தொகையைப் பார்க்கும்போது முதல் இடத்தில் இருப்பதாகத் தோன்றும். ஆனால், பொருளியலுக்கு ஏற்ப கடன் வாங்குவதில் தமிழகம் மோசமான நிலையில் இல்லை.
“ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுபவர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்குவதற்கும், ரூ.1 லட்சம் சம்பளம் பெறுபவர் அதே தொகையை கடன் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது,” என்றார் திரு உதயச்சந்திரன்.
தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.9 லட்சம் கோடி வரை இருக்கும் என்றும் வரும் நாள்களில் மேலும் ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தேவையான நேரத்தில் நிதி ஒதுக்குகிறோம். துறைகளுக்கு விடுவிக்கப்பட்டு பயன்படுத்தாத நிதி ரூ.11 ஆயிரம் கோடியை திரும்பப் பெற்றுள்ளோம். இவ்வாறான நிதி மேலாண்மை மூலம் கடந்த ஆண்டு ரூ.3,600 கோடி குறைவாகக் கடன் வாங்கியுள்ளோம். நடப்பு ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி குறைவாகக் கடன் வாங்குவோம்,” என்றார் உதயச்சந்திரன்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையாக மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் வராதபோதே நடப்பு ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறோம் என்றார் அவர். இது மேலும் ரூ.41 ஆயிரம் கோடி அளவுக்கு குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஜல்ஜீவன் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நினைத்த அளவுக்கு தொகை வரவில்லை. அது கிடைத்திருந்தால் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும். எனினும் டாஸ்மாக் வருவாய் 8% அதிகரித்துள்ளது.
“மின்னிலக்க சேவையில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். குறை கடத்தி துறையில் வடிவமைப்பு, பரிசோதனை உள்ளிட்ட எந்தப் பிரிவில் கவனம் செலுத்தலாம் என ஆலோசித்து வருகிறோம். ஒரு ட்ரில்லியன் பொருளியலை எட்டும் வகையில், வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துகிறோம்,” என்று திரு. உதயச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.