பிப்ரவரி 2, 3 தேதிகளில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு

1 mins read
10384551-6931-4ec5-a88d-95e231452503
டிஆர்பி ராஜா. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சென்னை: தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் மாமல்லபுரத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலோரச் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறைக்கு எனக் கொள்கை, வழிகாட்டி நெறிமுறைகளை முதல்வர் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு ராஜா, சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்றார்.

சுற்றுலாத் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, தேசிய, உலக சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை 2030ம் ஆண்டில் 12% அளவுக்கு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இயற்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

“தமிழ்நாட்டை நோக்கி வெளிநாட்டினர், இந்தியர்களை ஈர்க்கும் வகையில் சுற்றுலா மேம்படுத்தப்பட உள்ளது. கொடைக்கானலில் 100 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா கிராமம் ஒன்று அமைக்கப்பட உள்ளது,” என்றார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

குறிப்புச் சொற்கள்