சென்னை: பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொழில்சார் அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, அனைத்து சொகுசுப் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் (AOBOA) மலேசியச் சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கமும் (MATTA) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை சென்னையில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில், அனைத்து சொகுசுப் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அன்பழகனும், மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கத்தின் சார்பில் அதன் கௌரவ பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் முனுசாமியும் கையெழுத்திட்டனர்.
மின்சாரப் பேருந்துகள் இயக்கம், மின்னூட்டக் கட்டமைப்பு வசதிகள், வாகனப் பராமரிப்பு, மின்னியல் முன்பதிவு நடைமுறைகள், பயணிகள் பாதுகாப்பு, ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான பயிற்சிகள் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவங்களையும் நவீன நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்வது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், சுற்றுலாப் பேருந்துகள் இயக்கம், பயணிகள் சேவையின் தரத்தை உயர்த்துதல், தொழில்நுட்ப மையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிடுதல், கருத்தரங்குகள் மற்றும் தொழில்சார் கண்காட்சிகளில் இணைந்து பங்கேற்பது போன்ற வாய்ப்புகளையும் இரு சங்கங்களும் கூட்டாக ஆராயவுள்ளன.
இந்திய மற்றும் மலேசிய உறுப்பு அமைப்புகளுக்கிடையே தொழில்சார் சந்திப்புகள், தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சிகள், பயிற்சிகள் மற்றும் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முறையான கூட்டுச் செயல்பாட்டுக் கட்டமைப்பையும் இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.
