பென்னாகரம்: பென்னாகரம் அருகே கோட்டூர் மலை கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை டோலி படுக்கை கட்டி எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்ற நிலையில், சிறுமி வழியிலேயே பலியானார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வட்டவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அலங்கட்டு கிராமப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அலங்கட்டு கிராமப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்திற்கு மலை மீது அமைந்துள்ளதால் போதுமான சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில், அண்மையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு மண் சாலை அமைத்தது.
இருப்பினும், கிராமப் பகுதிகளில் ஏதேனும் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட அவசரநிலை ஏற்படும்போது, வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் டோலி படுக்கை கட்டி தூக்கிச் செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அலங்கட்டு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (13) என்ற சிறுமியைப் பாம்பு கடித்துள்ளது. இந்த சிறுமியின் உறவினர்கள் சிகிச்சைக்காக மலைக் கிராமத்தில் இருந்து டோலி படுக்கை கட்டி தூக்கிக்கொண்டு கால்நடையாக சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீங்காடு பகுதிக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி பலியாகியுள்ளார்.
தொடர்ந்து மலைக் கிராமப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிராமப் பகுதிக்கு முறையாக சாலை வசதியும், வனப்பகுதியில் கோட்டூர் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் சுகாதார நிலையமும் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.