பள்ளி மாணவர்களைப் பலிகொண்ட ரயில் விபத்து: ஊழியர் பணிநீக்கம்

1 mins read
aff8eb05-3220-4548-bf43-d9a5ef3d6310
பணிநீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவும் ரயில் மோதியதால் உருக்குலைந்த பள்ளி வாகனமும். - படங்கள்: தமிழக ஊடகம்

கடலூர்: பள்ளி வாகனத்தின்மீது ரயில் மோதி மாணவர்கள் மூவர் பலியானது தொடர்பில் ‘கேட்கீப்பர்’ பங்கஜ் சர்மா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கடலூரை அடுத்த செம்மங்குப்பத்தில் தண்டவாளக் கடப்புப் பகுதியில் தனியார் பள்ளி வாகனத்தின்மீது ரயில் மோதியது. அதில் மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமுற்றனர்.

அப்போது, அவ்விடத்தில் பணியிலிருந்து பங்கஜ் சர்மா, ரயில் வந்த சமயத்தில் மற்ற வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாதபடி குறுக்குக்கட்டையைப் போடாததே விபத்து நிகழக் காரணம் எனக் கூறப்பட்டது.

ஆனால், பள்ளி வாகன ஓட்டுநர் கேட்டுக்கொண்டதாலேயே பங்கஜ் சர்மா குறுக்குக்கட்டையை அகற்றி திறந்துவிட்டதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக அது தெரிவித்தது. பின்னர் காவல்துறை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள தெற்கு ரயில்வே ஒரு குழுவை அமைத்தது. பங்கஜ் சர்மா, பள்ளி வாகன ஓட்டுநர், ரயில் நிலைய மேலாளர்கள், தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 13 பேரிடம் அக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பங்கஜ் சர்மா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்