சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் இனி கியூஆர் குறியீடு மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் சென்னை ரயில்வே கோட்டம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “மின்னிலக்கப் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் விதமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எல்லா ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டு மையம், சரக்கு, கட்டுசிப்ப சேவை மையம் என அனைத்திலும் கியூஆா் குறியீடு மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடா்பான சிக்கல்களைத் தவிா்க்கவும், பயணச்சீட்டுகள் வழங்கும் முறை எளிதாக்கும் நோக்கத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பயணச்சீட்டு மையங்களில் உள்ள கியூஆா் குறியீட்டை வருடிய (scan) பின்னா் யுபிஐ செயலிகளின் மூலம் பயணச்சீட்டிற்கான கட்டணத்தைப் பயணிகள் செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டது உறுதியானதும் பயணச்சீட்டு வழங்கப்படும்.
இதனால், பயணச்சீட்டு மையத்தில் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும் என்றும் பயணிகளின் பயணம் வசதியாக அமைய இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

