கீரனூர் அருகே விரைவுச்சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம்

1 mins read
bc1873f0-85cd-4fdb-b1ee-57d2986b9039
புதுக்கோட்டை - திருச்சி விரைவுச் சாலையில் வியாழக்கிழமை, (13.11.2025) தரையிறங்கிய பயிற்சி விமானத்தை, பொதுமக்கள் பார்வையிடுகின்றனர். - படம்: ஊடகம்

புதுக்கோட்டை: கீரனூர் அருகேயுள்ள புதுக்கோட்டை - திருச்சி சாலையில் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கியது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து புறப்பட்ட சிறு பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மா சத்திரத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானி திறமையாகச் செயல்பட்டு சாலையில் தரையிறக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, விமானத்தின் முன்பகுதி பாகம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் விமானத்தை சாலையோரமாக நிறுத்தி போக்குவரத்து சீராக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியபோது அந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்ததாகவும் இருப்பினும் எந்தவொரு வாகனமும் விமானத்தால் சேதமடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் தரையிறங்கிய அந்த விமானத்தைக் காண அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும் பதற்றத்துடனும் கூடினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், விமானத்தின் அருகே யாரும் செல்ல விடாமல் தடுத்தனர்.

தொழில்நுட்பக் கோளாற்றால் சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானத்தின் உள்ளே இருந்த இருவரும் சிறுசிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். காயமடைந்த விமானிகள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்