தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களுக்கான மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள்

2 mins read
a972efbf-df99-419f-a0ef-d4643c02eff9
பன்னாட்டுப் புத்தகக் காட்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிதரூர், டி.ஆர். பாலு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி எனப் பலரும் கலந்துகொண்டனர்.  - படம்: ஊடகம்

சென்னை: பன்னாட்டுப் புத்தகக் காட்சி நிறைவு விழாவில் நூல் மொழி பெயர்ப்புக்காக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இதன் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், அவர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார்.

பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, தான்சானியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உட்பட 60க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீனத் தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

இதில் தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1,005 ஒப்பந்தங்களும், அயலக மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழக பள்ளிக்கல்வித் துறையின் தனித்துவ முன்னெடுப்பான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. இந்த வியத்தகு சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்,” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்