திருச்சி: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளிக்கும் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்கும் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தாய் ஏர்வேஸ், ஏர் ஏஷியா நிறுவனங்கள் இணைந்து இச்சேவையை வழங்குகின்றன.
அதன்படி, சனிக்கிழமை (செப்டம்பர் 21) இரவு திருச்சியிலிருந்து பேங்காக்கிற்கான முதல் விமானம் இயக்கப்பட்டது. அதுபோல், பேங்காக்கிலிருந்து கிளம்பிய விமானம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கியது. தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவ்விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாள்களில் திருச்சியிலிருந்து பேங்காக்கிற்கு நேரடி விமானச் சேவை வழங்கப்படும். அந்நாள்களில் இரவு 10.35 மணிக்குத் திருச்சியைச் சென்றடையும் விமானம், இரவு 11.05 மணிக்குத் திருச்சியிலிருந்து பேங்காக்கிற்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமான், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அங்குப் புதிய முனையம் திறக்கப்பட்டதையடுத்து, மேலும் பல நாடுகளுக்கு நேரடி விமானச் சேவைகள் வழங்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

