தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சாடல்

திருச்சி - மதுரை நெடுஞ்சாலை: அதானி குழுமத்திற்கு ரூ.1,692 கோடி ஒப்பந்தம்

2 mins read
8bea1565-3d69-44eb-af22-ae342255ba1f
அதானி சாலைப் போக்குவரத்து குழுமம் ரூபாய் 1,692 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் 124 கிலோ மீட்டர் திருச்சி - துவரங்குறிச்சி - மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, கடன் அடைப்பு காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட உள்ளது.

இதற்காக அதானி சாலைப் போக்குவரத்து குழுமம் ரூ.1,692 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதானி, அம்பானி உள்ளிட்டவர்களின் சொத்து பல மடங்கு அதிகரித்திருக்கிறது,” என்று அவர் சாடியுள்ளார்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் மேம்பாடு, கடன்சுமை காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரியதாக விளங்கும் இந்திய ரயில்வே துறையின் சில பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, முதன்முறையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி - துவரங்குறிச்சி - மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதானி குழுமம் நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

எந்தக் குற்றச்சாட்டை எவர் கூறினாலும் அதானி மீது எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மோடி அரசு பாதுகாத்து வருகிறது. ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறையில் 2023 டிசம்பரில் சிஏஜி அளித்த அறிக்கையில் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தது.

ஆனால், இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்த மோடி அரசு தயாராக இல்லை. மோடியின் அதானி ஆதரவு நடவடிக்கை ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை பிரதமர் மோடியும், பாஜகவும்தான் விளக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் ஒன்றிய அரசு, தேசிய நெடுஞ்சாலை சொத்துக்களை தனியார் வசமாக்குதலின் மூலம் ஆண்டுக்கு ரூ.54 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது. தனியார் மயமாக்கல் மூலமாக தேசிய நெடுஞ்சாலையின் கடனான ரூ.2.76 லட்சம் கோடியையும் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்