திருச்சி: சென்னையைச் சேர்ந்த நகை வணிகர் ஒருவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நகை விற்பனை செய்தபின், கிட்டத்தட்ட 10 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவரது வாகனம் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் சமயபுரம் அருகே சென்றபோது, திடீரெனச் சிலர் வழிமறித்தனர்.
பின்னர், வாகனத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த மூன்று பேர் மீதும் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர்கள் வைத்திருந்த பெட்டியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நகை வணிகர் அளித்த புகாரின் அடிப்படையில், சமயபுரம் காவல்துறையினர் நான்கு தனிப்படைகளை அமைத்துக் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரணத் தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாளரும் அவரது இரண்டு உதவியாளர்களும் கடந்த 8ஆம் தேதி சென்னையிலிருந்து கிலோகணக்கில் ஆபரணத் தங்கத்தை எடுத்துக்கொண்டு காரில் திண்டுக்கல்லுக்குச் சென்றார்.
பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு எஞ்சிய 10 கிலோ தங்கத்துடன் சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினர். அப்போதுதான் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.