தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி, தேர்தல் அரசியலிலும் குதித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து அமமுக தேர்தலைச் சந்தித்தது. அதன்பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
இந்நிலையில், அமமுகவின் நான்காவது பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை தஞ்சாவூரில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில், அனைவரின் ஆதரவுடனும் கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டார்.