தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார் முதல்வர்

2 mins read
4b817f2d-2e22-4686-9b3b-eb0bc260e940
அரிட்டாப்பட்டி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் முதல்வர். - படம்: ஊடகம்

மதுரை: அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அங்கு நடைபெறும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதனை எதிர்த்து அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராங்களில் உள்ள ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுவடைந்த நிலையில், மதுரையை நோக்கி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக பேரணியாக சென்றனர்.

அதனைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் பதவியில் இருக்கும் வரை இத்திட்டத்தை கொண்டு வர விடமாட்டேன். தமிழகத்தில் டங்ஸ்டன் வருவதற்கான எந்த காரணமும் கிடையாது. அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த 21ஆம் தேதி போராட்டக்குழு நிர்வாகிகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உடன் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை சந்திக்க சென்றனர்.

இதனைத்தொடர்ந்து ஜனவரி 22ஆம் தேதி மத்திய அமைச்சரிடம் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

மத்திய அமைச்சரும் பிரதமர் மோடியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் மகிழ்ச்சிகரமான செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 23ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அரிட்டாபட்டி செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் முதல்வர்.

குறிப்புச் சொற்கள்