சென்னை: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட ஏல நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை உடனடியாகக் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு, அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருவதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
“அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி,” என சு.வெங்கடேசன் எம்பி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அருகே சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கிறது வேதாந்தா நிறுவனம்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அமைவுகள், 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக் கோயில்கள் என தமிழக வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களைத் தாங்கி நிற்கும் இடம்,” என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டியைச் சீரழிக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதை ஏற்க இயலாது என அவர் கூறியுள்ளார்.
“அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய சிற்றூர்களில் ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழிடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாகவும் திகழ்கிறது,” என்று அன்புமணி மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.