தூத்துக்குடி விமான நிலையம் 20 லட்சம் பயணிகளுக்குச் சேவையளிக்கும்: மத்திய அமைச்சர்

தூத்துக்குடி விமான நிலையம் 20 லட்சம் பயணிகளுக்குச் சேவையளிக்கும்: மத்திய அமைச்சர்

2 mins read
a39bb61a-700e-434d-9af5-79546fadfd12
தூத்துக்குடி விமான நிலையம். - கோப்புப்படம்: தமிழ் சமயம்

தூத்துக்குடி: ரூ. 4,500 கோடி செலவில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளுக்குச் சேவையளிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்ற இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்தது. அதன்படி, ஆங்கிலேயர் காலத்து அடையாளமான ‘Tuticorin’ என்பது ‘Thoothukudi’ (தூத்துக்குடி) என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து மறு பெயரிடும் விழா விமான நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கலந்துகொண்டு பேசும்போது, தூத்துக்குடியின் கலாசார மரபைக் கெளரவிப்பதுடன், இப்பகுதியின் அதிகாரபூர்வ தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1,350 கிலோ மீட்டராக இருந்த ஓடுதளம் மூன்று கிலோ மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் பெரிய விமானங்கள் இங்கு தரையிறங்க முடியும் என்றும் திரு ராம்மோகன் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு என்றார் அவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. 2047க்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திரு ராம்மோகன், தமிழகத்தில் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது என்றும் அடுத்த சில மாதங்களில் அம்முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில், மதுரை விமான நிலையம், அனைத்துலக விமான நிலையமாக மாற்றம் காண்பது தொடர்பான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டது. மேலும், சேலம் விமான நிலையம் ‘உடான்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகிறது.

கோவை விமான நிலையம் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் விரைவில் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னைக்கு அருகே உள்ள வேலூரில் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில், சான்றிதழ் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் ராம்மோகன், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி வருகின்றனர் என்றார்.

குறிப்புச் சொற்கள்