தூத்துக்குடி கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தூத்துக்குடி கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

2 mins read
233ec8f7-eee8-4285-b5a4-219eb02f0a10
மீன் கழிவுகள் அகற்றும் நிறுவனங்களை மூட வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. - கோப்புப் படம்: வினவு

தூத்துக்குடி: மூன்று மீன் கழிவு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

பொதுத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வாக்காளர்கள், ஆளும் தரப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தயங்குவதில்லை.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராம மக்கள் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதே கிராம மக்கள் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மீன் கழிவு நிறுவனங்களை மூட வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர். பொட்டலூரணியில் மொத்தம் 900 வாக்காளர்கள் உள்ளனர்.

அங்கு இயங்கி வரும் மூன்று மீன் கழிவுகள் அகற்றும் நிறுவனங்களை மூட வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

எனினும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்தே நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிப்பது என கிராம மக்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.

மீன் கழிவு நிறுவனங்களை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. மேலும், இதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது பதியப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொட்டலூரணி கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளும் உள்ளன.

தேர்தல் புறக்கணிப்பு குறித்த இந்த முடிவை மாநில ஆளுநர், தலைமைச் செயலாளர், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 22 முக்கிய அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் மனுவாக அனுப்பியுள்ளதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்