சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.
“இதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
“இந்தக் குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தகச் சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தாதியர், மகளிர் அமைப்புகள், இளையர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து தரவுகளைப் பெற உள்ளது,” என்று கூறியுள்ளார்.
மேலும், “அவர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையை சிறப்புக் குழு தயார் செய்ய உள்ளது,” என்றார்.
தேர்தல் அறிக்கை குழு விவரத்தையும் விஜய் அறிவித்தார்.
அதன்படி, கே.ஜி.அருண்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டி.எஸ்.கே.மயூரி, ஏ.சம்பத்குமார், எம்.அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், டி.கே.பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா, எம்.சத்ய குமார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
“மேற்கண்ட குழுவினருக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த ஜேசிடி பிரபாகர், இக்குழுவில் இடம்பெற்றிருக்கும்போது, மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இடம்பெறாதது பேசுபொருளாகியிருக்கிறது.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை குழுவை ஏற்கெனவே அமைத்துவிட்ட நிலையில் தவெகவும் அதில் இறங்கியுள்ளது.

