தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சியில் விஜய்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

2 mins read
02c2d04d-3534-49e5-a69c-87d2e26daef8
திருச்சியில் பிரசாரம் செய்வதற்கு வருகை அளிக்கும் தவெக தலைவர் விஜய். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

திருச்சி: சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப்டம்பர் 13) தொடங்கினார்.

தனி விமானம்மூலம் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்வதற்காக நவீன ரகப் பேருந்தை விஜய் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டர்கள் யாரும் ஏறிவிடாதபடி இரும்பு வேலிகளும் பேருந்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன், நவீன கண்காணிப்புப் படக்கருவிகளும் ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், விஜய்யின் பிரசார வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு சிறிதும் நகர முடியாத அளவுக்குத் தொண்டர்கள் சூழ்ந்தனர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.

காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறித் திரளான தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடர்ந்ததால், விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே பிரசாரம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பிரசார இடத்துக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவர் நிகழ்விடத்துக்குச் செல்லவே இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று தமிழகத் தகவல்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே விக்கிரவாண்டி, மதுரையென இரண்டு மாநில மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், அவருடைய இப்போதைய திருச்சி சுற்றுப்பயணத்தில் இளைஞர்கள், பெண்கள் அதிகம் கூடியுள்ளனர்.

விஜய்யின் பிரசார வாகனத்தில் மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றையும் தவெக வெளியிட்டுள்ளது.

அதில், உங்கள் விஜய் நான் வருகிறேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக விஜய்யின் பிரசாரப் பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவலர்கள் அனுமதி அளித்திருந்தனர்.

அதன்படி, அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். பிரசாரம் செய்யப்படும் வழித்தடங்களில் தங்கள் தலைவரின் வாகனத்திற்குப் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது.

பொதுமக்கள் பிரசாரத்தைச் சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களைத் தாங்களே அமைத்துத் தர வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பிரசாரத்தை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது உள்ளிட்ட 25 நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.

விஜய்யின் பிரசாரம் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்