திண்டுக்கல்: தோட்டத்திற்குள் புகுந்து தொல்லை கொடுத்த குரங்கின் சேட்டையால் கோபமடைந்த ஆடவர், அதை சுட்டுக்கொன்றார். பின்னர் அதை சமைத்தும் சாப்பிட்ட குற்றச்சாட்டின் பேரில் அந்த ஆடவர் உட்பட இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராஜாராம் (33 வயது). இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த சில நாட்களாக குரங்குகள் புகுந்து தொல்லை கொடுத்து வந்தன.
அவற்றின் சேட்டையால் மாங்காய்களும் பல்வேறு பயிர்களும் நாசமடைந்ததால் கடுங்கோபமடைந்தார் ராஜாராம். இதையடுத்து தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியான ஜெயமணி என்பவரை சந்தித்துப் பேசிய அவர், குரங்குகளைக் கொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்காக ஒரு தொகை பேசப்பட்டு, பின்னர் ஆயிரம் ரூபாய் கைமாறியது. இதையடுத்து தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியுடன் ராஜாராமின் தோட்டத்துக்குச் சென்ற ஜெயமணி, அங்கிருந்த ஒரு குரங்கைச் சுட்டு கொன்றதாகத் தெரிகிறது. பிறகு இருவரும் அந்தக் குரங்கை சமைத்துச் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரியவர, ஜெயமணியைப் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து, ராஜாராமும் சிக்கினார். அவர்களிடமிருந்து குரங்குத் தோல், நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.