தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாகக் கஞ்சா கடத்திய இருவர் சென்னையில் கைது

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாகக் கஞ்சா கடத்திய இருவர் சென்னையில் கைது

2 mins read
2a3ad5cf-1800-4360-8a92-f2084ae7418c
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள 11 கிலோ ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக ரூ.11 கோடி மதிப்புள்ள கஞ்சாவைக் கடத்திவந்த இளையர் இருவரைச் சென்னை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூன் 18) கைதுசெய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அவர்களிடமிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள 11 கிலோ ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய அந்த இருவரையும் இடைமறித்துச் சோதனையிட்டனர்.

அவர்கள் இருவரும் தாய்லாந்திற்குச் சென்று ஒரே நாளில் திரும்பியதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவர்கள்மீது சந்தேகம் கொண்டனர்.

அவர்களின் பயண உடைமைகளை விரிவாகச் சோதனை செய்ததில், உணவுப் பொட்டலங்களுக்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்விருவரும் அனைத்துலகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பணத்திற்காக அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததாகவும் விமான நிலையத்திற்கு வெளியே இருந்தோரிடம் அதனை ஒப்படைக்க இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவரிடம் ஐந்து கிலோ கஞ்சாவும் இன்னொருவரிடம் ஆறு கிலோ கஞ்சாவும் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை அடையாளம் காண முயன்றுவருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே, இன்னொரு வழக்கில் ஜே. அப்துல் ஜப்பார், 42, என். அப்துல் நாசர், 63, என்ற இருவரைச் சென்னை முத்தியால்பேட்டைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து 800 மெத்தம்ஃபெட்டமைன் போதை மாத்திரைகள், இரண்டு கைப்பேசிகள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாசர் அந்தப் போதைப்பொருளை மொத்தமாக வாங்கி, விநியோகத்திற்காக ஜப்பாரிடம் கொடுத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்