மதுரை: சமையல் எரிவாயுக் கலனைப் பதுக்கிய இருவரை மதுரை காவல்துறை குண்டர் சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்துள்ளது. இத்தகைய குற்றத்துக்காகத் தமிழகத்தில் இரண்டு பேர் கைதாவது இதுவே முதல் முறை.
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், சமையல் எரிவாயுக் கலனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பதுக்கலைத் தடுப்பதற்காக அத்தியாவசியப் பொருள்கள் (எஸ்மா) சட்டம்) அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் உணவுப் பொருள்களும் சமையல் எரிவாயுக் கலனும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளைப் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 209 எரிவாயுக் கலன்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான மதன் என்பவரும் 189 எரிவாயுக் கலன்களை பதுக்கியது தெரியவந்ததை அடுத்து அவையும் கைப்பற்றப்பட்டன.
இருவர் மீதும் ‘எஸ்மா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மானிய விலையில் விற்கப்படும் சமையல் எரிவாயுக் கலன்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை பாயும் எனக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

