அமராவதி: ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது இருவர் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) உயிரிழந்தனர் என்று அம்மாநில அதிகாரிகள் கூறினர்.
ராஜமுந்திரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ‘த இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.
இரு மூதாட்டிகளின் வயது 85, 70. கடந்த 24 மணி நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எழுவருடன் அவர்களும் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், சிறுநீரகம் செயலிழந்ததால் இரு மூதாட்டிகளும் இறந்தனர். எஞ்சிய நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கே. கீர்த்தி செக்குரி கூறுகையில், சுவருப் நகரிலும் செளதேஷ்வரி நகரிலும் ஒரு பால்காரர் 100 வீடுகளுக்கு மேல் பால் விநியோகித்து வருகிறார். கலப்பட பால் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
75 வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் கலப்படம் இருந்தது தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
மாவட்ட மருத்துவ, சுகாதார அதிகாரி கே. வெங்கடேச ராவ், பல தனியார் மருத்துவமனைகளிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் குறிப்பாக வயதானவர்கள் சிறுநீர் கழிக்க முடியாத பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“உடனே பால்காரர் பால் விநியோகித்த வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாலில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவசர உதவி குழுக்கள் இரு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச்சென்று பால், உணவு, தண்ணீர் ஆகியற்றை மாதிரிக்குச் சேகரித்து சோதனைச் சாலைக்கு அனுப்பியது.
தற்காலிக சோதனைச் சாலைகளும் இரண்டு பகுதிகளிலும் அதிகாரிகள் அமைத்துள்ளனர். மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜமுந்திரியில் உள்ள அரசாங்க பொது மருத்துவமனை இரு மூதாட்டிகளின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ, சுகாதார அதிகாரிகளை ராஜமுந்திரிக்கு உடனடியாகச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

