தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமிலம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் இருவர் மரணம்; ஓட்டுநர் உயிர் ஊசல்

1 mins read
3f0511a9-dfb7-49e2-96a6-c43b7b5216ef
மிதிவண்டி மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதிய வேகத்தில் அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. - படம்: தமிழக ஊடகம்

புதுச்சேரி: ஆபத்தான அமிலம் நிறைந்த லாரி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு எண்ணெய் லாரி ஒன்று அமிலம் ஏற்றி சென்றுகொண்டு இருந்தது.

நேற்று (ஜூன் 7) காலை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி வந்தபோது மிதிவண்டியில் சென்ற இருவர் சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது, லாரி எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதுடன் அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மிதிவண்டியில் சென்ற இரண்டு ஆடவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் வாயலூர் பகுதியைச் சேர்ந்த துரை மற்றவர் வெளியூரை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் என காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த ஆபத்தான அமிலம் கசிந்தது. மேலும் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நிகழ்ந்த விதம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவிழ்ந்த லாரியை மீட்கும் பணிகளும் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்