தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு

2 mins read
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தர்கள் பரவச முழக்கம்
ff8cdf27-b209-4e21-b23b-026ed6f5eec9
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வினைக் காண குவிந்திருந்த பக்தர்கள். - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

மதுரை: சித்திரைத் திருவிழாவைக் கண்டு மகிழ்வதற்காக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்த எதிர்பாராத சம்பவங்கள், அங்குத் திரண்டிருந்த பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கட்கிழமை (மே 12) காலை பக்தர்களின் ‘கோவிந்தா...கோவிந்தா’ முழக்கம் விண்ணைப் பிளக்க உற்சாகமாக நடைபெற்றது.

மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வைக் காணத் திரண்டதால் வைகை ஆறே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை நேரிலும் தொலைக்காட்சி வழியாகவும் கண்டு தரிசித்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணி முதல் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அப்பகுதியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் நின்றுகொண்டிருந்தார்.

அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால், நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது.

பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதேபோல் யானைக்கல் கற்பாலம் அருகே கூட்டநெரிசலில் சிக்கிய கண்ணன் (43) என்பவரும் உயிரிழந்தார்.

தேசத்துக்கு வளம் சேரட்டும்: ஆளுநர் ரவி

இதனிடையே, சித்திரைத் திருவிழா தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில் நாம் பக்தி, கலாசாரம், தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரிய விழாவைக் கொண்டாடுகிறோம்.

“இந்தக் கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத நம் ஒற்றுமை உணர்வையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

“கள்ளழகரின் அருள் நம் அனைவருக்கும் நல்லிணக்கம், வளம், ஆன்மிக பலத்தையும் நமது தேசத்துக்கு அதிக மகிமையையும் கொண்டு வரட்டும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்