சென்னை: தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐநா பேரவையில் விருது கிடைத்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமைச்சருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதன்மையான, சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதற்காக சுகாதாரத்துறைக்கு ஐநா விருது அளித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருதானது, அமெரிக்காவில் நடைபெற்ற 79வது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த, விரிவான மருத்துவச் சேவைகள் பயனாளிகளின் இல்லங்களைத் தேடிச் சென்று வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 1.8 கோடி பேர், முதன்முறை சேவைகளையும் 3.96 கோடி பேர் தொடர் சேவைகளையும் பெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

