ஐநா விருது பெற்ற ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: கள நிலவரம்

4 mins read
e9e8d55c-da77-4c5f-b5d8-6a10c453300a
இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகளால் பயனடைவோர் எண்ணிக்கை இன்று 2 கோடியைக் கடந்துள்ளது. - படம்: ஊடகம்
multi-img1 of 4

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைத் திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டம் என்ற அடைமொழிகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக, தமிழக அரசு உடனடியாக ரூ.242 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

முதற்கட்டமாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருந்துகள் வழங்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

சுருக்கமாகச் சொல்வதானால், தொற்றா நோய்களைத் தடுக்கும் திட்டம் என்று குறிப்பிடலாம்.

30 லட்சம் முதல் 2 கோடி வரை:

முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் பயனடைவர் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 1,172 துணை சுகாதார மையங்கள், 189 ஆரம்பச் சுகாதார மையங்கள், 50 சமுதாய நல்வாழ்வு மையங்கள், சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 76 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மையங்கள் என 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் தன்னார்வலர்கள் கிராம சுகாதார தாதியர் இந்தத் திட்டப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகளால் பயனடைவோர் எண்ணிக்கை இன்று இரண்டு கோடியைக் கடந்துள்ளது.

மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில், மக்களுடைய வீடுகளுக்கே சென்று, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களில் உயர் ரத்த அழுத்தத்தால் 92.59 லட்சம் பேர், நீரிழிவு நோயால் 46.54 லட்சம் பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் 41.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் 11,000 சுகாதார தன்னார்வலர்கள், 3,000க்கும் மேற்பட்ட தாதியர் பணியாற்றி வருகின்றனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய திட்டங்கள்:

பேரளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வரையிலான காலகட்டம் வரை, சுமார் இரண்டு கோடி பயனாளிகள் முதன்முறை சேவைகளைப் பெற்றுள்ளதாகவும் மருந்துகள் கொண்ட 42,279,337 மருந்துப் பைகள் (மெடிக்கல் கிட்) விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக இதயம் பாதுகாக்கும் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகுத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், பாதம் பாதுகாக்கும் திட்டம் என மேலும் பல திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படுத்தி வருவதாகச் சொல்கிறார் அதன் அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன்.

இத்திட்டங்கள் அனைத்தும் வெகு சிறப்பாக, நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக இத்துறையின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கீகாரம் அளித்த ஐநா விருது:

கடந்த ஆண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா அமைப்பின் 2004ஆம் ஆண்டுக்கான ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ (Task Force Award) விருது அறிவிக்கப்பட்டது.

புதுமை, தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல் உட்பட தொற்றா நோய்கள் மற்றும் மன நலம் தொடர்பாக சிறந்த பணிகள், இந்த விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன.

இதன் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டம், தமிழ்நாட்டை உலகத்திற்கே முன்மாதிரியான மாநிலமாக விளங்கச் செய்கிறது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தன்னார்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:

இதில் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

“கிராமப்புறங்களில் நூறு விழுக்காடு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடிகளில் குடியிருப்பவர்களை அணுக முடியாத நிலை உள்ளது. எனினும், இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,” என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தன்னார்வலர்களுக்குத் தமிழக அரசு ரூ.4,500 ஊதியம் வழங்குகிறது. நாள்தோறும் 10 வீடுகளுக்குச் சென்று, 20 பேரைச் சந்தித்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கும் பணிகளை ஒருங்கிணைப்பதுதான் இவர்களுடைய பணி ஆகும்.

எனினும், மலைக்கிராமங்களுக்குச் செல்வதும் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களுக்கு நீண்ட தூரம் நடந்து செல்வதும் தன்னார்வலர்களுக்கு கடினமாகிறது.

மேலும், தவறான பரிசோதனை முடிவுகள், அனுபவமின்மை ஆகிய காரணங்களால் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்கூட சில தரப்பினர் முணுமுணுக்கிறார்கள்.

இதற்கிடையே, இத்திட்டப் பணியாளர்களுக்கு போக்குவரத்துப் படிகளையும் சேர்த்து ரூ.5,500 மட்டுமே மாத ஊதியமாக கிடைத்து வருகிறது. இதையடுத்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம், பணிச்சுமையைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அரசு இதற்கு தீர்வு காணாவிட்டால் இத்திட்டம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

பாராட்டும் உலக சுகாதார நிறுவனம்:

இதற்கிடையே, மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக வீடு வீடாகச் சென்று மருத்துவச் சேவையாற்றி வரும் பெண் பணியாளர்களை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

அவர்களுடைய பங்களிப்பு அனைவரும் மெச்சும் வகையில் இருப்பதாகவும் இத்திட்டத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் அந்நிறுவனம் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சாதக, பாதக அம்சங்களுக்கு மத்தியில் இத்திட்டம் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுத்தப்படுவதைப் பாராட்ட வேண்டுமென ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

“இத்திட்டம் தொடங்கப்பட்டபோது குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது பயனடைய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை இரண்டு கோடிகளுக்கு மேலாக அதிகரித்துள்ளது,” என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இரண்டு கோடி பயனாளிகள் என்பது நம்ப முடியாத எண்ணிக்கை என்பதால், தமிழக அரசு பயனாளிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆனால், இத்திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் தேர்தல் மூலம் நன்றி தெரிவிப்பார்கள் என்கிறது ஆளும் தரப்பு.

எனவே, தமிழகத் தேர்தல் முடிவுகள்தான் பல்வேறு திட்டங்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்.

குறிப்புச் சொற்கள்