தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராமங்களில் தடையற்ற இணையச் சேவை: அக்டோபர் 11ஆம் தேதி துவக்கம்

2 mins read
712b65c3-b337-4f14-a4cb-5ce01d53a9c0
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையற்ற இணையச் சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் தடையற்ற இணையச் சேவை வழங்கும் திட்டம் வரும் 11ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையற்ற இணையச் சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கண்ணாடிக் கம்பி இழை (ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) அமைக்கும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கியது.

இந்நிலையில், அந்தப் பணி நிறைவடைந்ததை அடுத்து, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தடையற்ற இணையச் சேவை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அதிவேக இணையச் சேவை வழங்க, பாரத் நெட் திட்டத்தில் தமிழ்நாடு ஃபைபர் நெட் கழகம் வாயிலாக தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் தோறும் கண்ணாடிக் கம்பி இழை பொருத்தும் பணியும் இணையச் சேவைக்கான கருவிகளைப் பொருத்தும் பணியும் இரு ஆண்டுகளாக நடந்து வந்தன.

கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்கள், வட்டார வளர்ச்சி மையங்கள் இதன் கட்டுப்பாடு அறையாக செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒருசில ஒதுக்குப்புறமான கிராமப்பகுதிகளில் இணைய இணைப்பு கிடைப்பது கடினமாக இருந்தாலும், கிராம ஊராட்சிகளில் வழங்கப்படும் இணையச் சேவையால் இக்குறை தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் காணொளி வசதி மூலம் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழா அனைத்து ஊராட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பாகும். இத்தகைய நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் ஊரக நிர்வாகப் பணிகள் எளிதாகும் என்றும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ‘வைஃபை’ இணைப்பு வழங்குவது, கைப்பேசி கோபுரங்களுக்கு இணைப்பு வழங்குவது, அலைவரிசை இணைப்புகளை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் குத்தகைக்கு விடுவது போன்ற ஊராட்சிகளுக்கு நல்ல வருவாய் ஈட்டித்தரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்