சிதம்பரம்: மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 15), முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு உடனுக்குடன் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ‘முதல்வரின் முகவரி’ என்ற திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 95% மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் மக்களின் வீடு தேடி சென்று, அவர்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்தது.
இத்திட்டத்தின்கீழ் நகர்ப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகர்ப் பகுதிகளில் 3,738 முகாம்களும் கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படும். இது ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களை விட இருமடங்கு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், கணினி இயக்குநர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,” என தமிழக அரசு மேலும் கூறியுள்ளது.