போதைப்பொருள் ஒழிப்புக்காக ஒற்றைச்சக்கர மிதிவண்டிப் பயணம்

போதைப்பொருள் ஒழிப்புக்காக ஒற்றைச்சக்கர மிதிவண்டிப் பயணம்

1 mins read
e67b30b8-06cb-40da-a9f5-1d12721f7eed
மாமல்லபுரம் நகர்ப் பகுதிகளில் ஒற்றைச்சக்கர மிதிவண்டியை ஓட்டிச்சென்று, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சனீத் விநியோகித்தார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: போதைப்பொருள்களின் பேராபத்தை உணர்த்தவும் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும் 26 வயது இளையர் ஒருவர் கேரளாவில் இருந்து நேப்பாளம் வரை ஒற்றைச்சக்கர மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், ஸ்ரீகுன்றத்தைச் சேர்ந்தவர் சனீத், 26. சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த இவர், ஒற்றைச்சக்கர மிதிவண்டியில் ஏறக்குறைய ஓராண்டு காலம் பயணம் செய்து நேப்பாளம் சென்றடையத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் தனது விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கிய சனீத், கோவை, மதுரை, தஞ்சாவூர், புதுவை வழியாக ஏறக்குறைய 800 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து புதன்கிழமை (செப்டம்பர் 2) மாமல்லபுரம் வந்தடைந்தார்.

அவரை அர்ஜுனன் தபசு சிற்பம் அருகில் மாமல்லபுரம் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் சுற்றுலாப் பயணிகள், தன்னார்வலர்கள், அரிமா சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து மாமல்லபுரம் நகர்ப் பகுதிகளில் ஒற்றைச்சக்கர மிதிவண்டியை ஓட்டிச்சென்று, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சனீத் விநியோகித்தார்.

இளையர்கள் போதைப் பாதையில் சீரழிவதைத் தடுக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாகக் கூறிய அவர், வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துவிட்டு நேப்பாளத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்