சென்னை: அனைத்து மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகுதான் தொழில் பாதுகாப்புப் படைத் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா சுட்டிக்காட்டினார்.
“தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது,” என்றார் அமித்ஷா.
பாஜகவுக்கு ஸ்டாலின் சவால்
இதற்கிடையே, மும்மொழிக்கொள்கையை முன்வைத்து 2026 தேர்தலை பாஜகவால் எதிர்கொள்ள முடியுமா என முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
“அடுத்த தேர்தல் இந்தித் திணிப்பு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக அமையட்டும். வரலாறு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற் கடிக்கப்பட்டனர்.
“பின்னர் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திமுகவுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழகம் சகித்துக்கொள்ளாது,” என்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கான விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் இந்தி மொழி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு பல காலம் ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நாம், நம் பணியை மட்டும் செய்து கொண்டிருந்தபோது, மத்திய கல்வி அமைச்சர்தான் நம்மைத் துாண்டிவிட்டு தொடர் கடிதங்களை எழுத வைத்தார்.
“இந்தித் திணிப்பை ஏற்கும்படி ஒரு மாநிலத்தையே அச்சுறுத்த துணிந்தார். தன்னால் வெற்றி பெற முடியாத ஒரு போரை துாண்டியதற்கான எதிர்விளைவை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

