சென்னை: மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தடத்துக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.18,564 கோடி செலவுகளில் இந்திய அரசு இதுவரை ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் பாரபட்சம் காண்பிக்கும் நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தடத்திற்கு ரூ.21,000 கோடி கடனுதவியை மத்திய அரசு பெற்றுத் தந்தது என்றும் அதில் ரூ.5,880 கோடி மட்டுமே தமிழ்நாடு அரசு செலவு மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தடத்துக்கு இதுவரை ரூ.18,564 கோடி மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகளில் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியான மற்றும் முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.
“மத்திய நிதி அமைச்சர் ரூ.21,000 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“உண்மையில் இதுவரை இந்தத் திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை,” என்று அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

