ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் வலியுறுத்தல்

ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் வலியுறுத்தல்

படம்: தமிழக ஊடகம்

26 Oct 2024 - 4:52 pm

2 mins read

சென்னை: பணியின்போது பாதுகாப்பு வழங்குதல், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்றது.

இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுக கூட்டமாகவே நடைபெற்றது. முதல்கட்ட பேச்சு முடிந்து சுமார் 2 மாதங்களான போதும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாதது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐஎன்டியுசி, ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை, டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் நலச் சங்கம், அம்பேத்கர் அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை, பாரத அரசு போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கம், பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை ஆகிய ஆறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரை அக்டோபர் 26ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும், ஓட்டுநர், நடத்துநருக்கு பணியின்போது பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர்களைத் தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்ததாகத் தொழிற்சங்கத்தினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
பேச்சுவார்த்தைதொழிலாளர்பாதுகாப்பு