கன்னிப்பெண் கோலத்தில் வித்தியாசமான பொங்கல் திருவிழா

1 mins read
f6d493eb-19cb-495a-92e5-2c872a7b91e0
கடைசியாக இந்த அபூர்வத் திருவிழா கடந்த 2022ஆம் ஆண்டு நடந்துள்ளது. - படம்: ஒன் இந்தியா

சேலம்: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெண்கள் கன்னிப் பெண் கோலத்தில் பொங்கல் வைக்கும் திருவிழா சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அங்கு தலைவாசல் பகுதியில், வட்டப்பாறையில் நல்லசேவன் கோவில் உள்ளது. இங்குதான் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த அபூர்வத் திருவிழாவை நடத்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மே அல்லது ஜூன் மாதத்தில் நடக்கும் இந்தத் திருவிழாவில் கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாகப் பங்கேற்பது வழக்கம்.

திருவிழாவின்போது நள்ளிரவில் உள்ளூர் மாரியம்மன் கோவிலில் இருந்து நல்லசேவன் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து அதிகாலையில் வழிபடுகின்றனர்.

அப்போது, சுமங்கலிப் பெண்கள் பொங்கல் பூசைக் கூடையைத் தலையில் சுமக்கும் முன்பு தாலி, வளையல், தோடு, மற்ற நகைகளை வீட்டில் உள்ள பூசை அறையில் வைத்த பின்னர் கன்னிப்பெண் கோலத்தில் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

நல்லசேவன் சாமியுடன் பிறந்த ஆறு மூத்த சகோதரர்களுக்கும் நடுகல் அமைப்பில் சிலைகள் உள்ளன. நல்லசேவனுக்கும் முறுக்கு மீசையுடன் கூடிய போர் வீரன் தோற்றத்தில் சிலை உள்ளது.

கடைசியாக இந்த அபூர்வத் திருவிழா கடந்த 2022ஆம் ஆண்டு நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அபூர்வத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கிவிட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்