திருப்போரூர்: கோயில் உண்டியலில் கைத்தவறி விழுந்த முருகப் பக்தரின் ஐபோன் கைப்பேசி அவரிடமே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) திருப்பி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு கடந்த அக்டோபர் மாதம், அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபட வந்திருக்கிறார்.
சுவாமி தரிசனத்துக்குப்பின் உண்டியலில் காணிக்கை செலுத்தியபோது, எதிர்பாராதவிதமாக அவரது கையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புடைய ஐபோனும் உண்டியலில் விழுந்துவிட்டது.
இதனை கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, உண்டியலில் விழும் காணிக்கை அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி, அதைத் திருப்பித் தருவதற்கு மறுத்து விட்டனர்.
எனினும், இந்து சமய அறநிலையத் துறையிடம் தினேஷ் புகார் அளித்தார்.
உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்ட சமயத்திலும் கூட, தினேஷை அழைத்து கைப்பேசியில் உள்ள தரவுகளை வேண்டுமானால் வேறொரு கைப்பேசியில் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், கைப்பேசியை மட்டும் திருப்பித் தரமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
“ஐபோன் குறித்து ஆலோசனை நடத்தி, சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு உறுதி கூறினார்.
இந்நிலையில், சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கின்ற ஆட்சி; எடுக்கின்ற ஆட்சியல்ல. கடந்த காலங்களில் நடந்தது கிள்ளிக் கொடுக்கின்ற ஆட்சி, இந்த ஆட்சி அள்ளிக் கொடுக்கின்ற ஆட்சி. ஆகையால், பக்தரின் கைப்பேசி அவரிடமே ஒப்படைக்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தார்.