சிவகங்கை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், காவல் நிலையங்களில் நடந்த விசாரணையின்போது, 31 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து, இந்த மரணங்கள் குறித்து ஐஜி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய காவல்துறையினருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என உண்மைக் கண்டறியும் குழு சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
திருப்புவனம் அருகே அண்மையில் இளையர் அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்ததை அடுத்து, ஐந்து காவலர்கள் கைதாகினர்.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகியுள்ள 31 காவல் மரணச் சம்பவங்களில் இரண்டு வழக்குகளில் மட்டுமே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற வழக்குகளில் விசாரணை நீடிப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.
எனவே, ஐஜி தலைமையில் குழு அமைத்து, விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.