சென்னை: தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களைப் பெறுவதற்கு ‘உள்ளகப் புகார்க் குழு’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர்கல்வித் துறையை மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக, கல்லூரிகளில் மாணவியருக்குப் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையிலுள்ள அரசுக் கலைக் கல்லூரியில் மாணவியருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்திற்குப் புகார் வந்தது. அதனடிப்படையில், அங்கு பணியாற்றும் பேராசிரியர் இருவர் உட்பட நால்வர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில், இதுபோன்ற பாலியல் தொல்லை குறித்த புகார்களைப் பெறுவதற்கு ஏதுவாகப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ‘உள்ளகப் புகார்க் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித் துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
இதன் தொடர்பில் மகளிர் ஆணைய நிர்வாகிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
அவ்வாறு அமைக்கப்படும் உள்ளகப் புகார்க் குழுவில், மாணவியர் தரப்பில் ஒருவரும், பெண் பேராசிரியர் ஒருவரும், தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என ஆணையம் வலியுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.