சென்னை: அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்பரேசன் நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மேம்பாடு, புத்தாக்க நிலையம் அமைக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கேஎல்ஏ கார்ப்பரேஷன், பகுதி மின்கடத்தி துறைக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள முன்னணி சில்லு உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி, மேம்பாட்டுச் சேவைகளை வழங்கி, புதிய தலைமுறை பகுதி மின்கடத்தி வளர்ச்சியில் அந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், கேஎல்ஏ கார்ப்பரேசனின் துணை நிறுவனமான கேஎல்ஏ இந்தியா நிறுவனம் ரூ.3,510 கோடி முதலீட்டுடன் சென்னையில், ஆராய்ச்சி மேம்பாடு, புத்தாக்க வளாகத்தை அமைப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.
சென்னையில், 12 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி, புத்தாக்கப் பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
அதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், 4 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

