சென்னை: தேர்தல் பிரசாரங்களில் சிறு குழந்தைகளைப் பயன்படுத்துவது நாகரிகமற்றது, அருவெறுப்பானது என்றும் மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் கே. சிவகுமார் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர். ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், குழந்தைகள் மூலமாக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தவெகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தக் கோரினார் என்றும் அது வாக்காளர்களின் முடிவில் முறையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதால் சிவகுமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, தேர்தலில் சிவகுமாரின் வெற்றியை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து வாக்கு கேட்கச் செய்வது உணர்வுரீதியான அணுகுமுறையே தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அதை தேர்தல் முறைகேடாகவோ அல்லது வாக்காளர்களின் சுய உரிமையைப் பறிக்கும் செயலாகவோ கருத முடியாது என நீதிபதி விளக்கமளித்தார்.
அதேவேளையில், குழந்தைகளை வைத்து சமூக ஊடகங்களில் அரசியல் காணொளிகள் (ரீல்ஸ்கள்) தயாரித்து பிரசாரத்தில் ஈடுபடுத்துவது பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையையும் மோசமான வளர்ப்பையுமே காட்டுகிறது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், எதிர்காலத்தில் குழந்தைகளை அரசியல் பிரசாரங்களில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வதா அல்லது அதைத் தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான சட்டபூர்வ காரணமாக மாற்றுவதா என்பது குறித்து நாடாளுமன்றமும் தேசமும் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
