செங்கல்பட்டு: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘வான்விழி’ எனும் புதிய ஆளில்லா வானூர்திக் (டிரோன்) கண்காணிப்புத் திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இத்திட்டத்தின்கீழ் இயக்கப்படும் அதிநவீன ஆளில்லா வானூர்திகள் தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் 24 மணி நேரமும் செயல்படும் திறன் கொண்டவை.
இரவு நேரங்களிலும்கூட பரந்த பரப்பளவைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘வான்விழி’ திட்டத்தின் முக்கிய நோக்கம்
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஒதுக்குப்புறமான பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இத்திட்டம் உதவும் என்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, கடத்தல், சமூக விரோதச் செயல்களை உடனுக்குடன் கண்டறியவும் இத்திட்டம் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து சீரமைப்பு
முக்கியச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து சீர்செய்தல், சுற்றுலாத் தலங்களில் கூட்ட மேலாண்மையை முறைப்படுத்துதல், அவசர நிலைகள், இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப் பணிகளுக்கு வான்வழித் தரவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வான்விழி திட்டத்தின் மூலம் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வான்விழி’ ஆளில்லா வானூர்தி அமைப்பு, காவல்துறையின் அவசர உதவி எண்கள், கட்டுப்பாட்டு அறையான 112 உடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது குற்றச் சம்பவங்கள் நிகழும்போது, ஆளில்லா வானூர்திகள் வழங்கும் நிகழ்நேரத் தரவுகள் அடிப்படையில் சம்பவ இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து, அங்கு உடனுக்குடன் சுற்றுக்காவல் வாகனங்களை அனுப்ப இயலும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப உதவியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றும் என காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்து மேலும் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


