தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.5 கோடி கேட்டு வடிவேலு வழக்கு; சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு

2 mins read
d2c4c5d1-f1da-4694-841c-ce3ed0b96320
நடிகர் சிங்கமுத்து (இடது), நடிகர் வடிவேலு. - படம்: ஊடகம்

சென்னை: யூடியூப் ஒளிவழியில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து நடிகர் சிங்கமுத்தை இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தரும்படி சிங்கமுத்து தரப்பினர் கோரினார்.

இதையடுத்து, அவரது தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

முன்னதாக உயர் நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் இதுவரை 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக ஊடகங்களிலும் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

“நடிகர் சிங்கமுத்தும் நானும் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளன.

“இதனையடுத்து, எனது வளர்ச்சியைப் பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

“இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் ஒளிவழியில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் உள்ள எனது நற் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. தாளாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

“எனவே, சிங்கமுத்து எனக்கு இழப்பீடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும்,” என்று கோரியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்