சென்னை: யுஜிசி என்னும் தன்னாட்சி அமைப்பைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு நசுக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்கலைக்கழக மானியக் குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய வரைவு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப் புதிய விதிமுறையின் படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர் மட்டுமே நியமனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் ஒருவரையும், யுஜிசி தலைவர் ஒருவரையும், பல்கலைக் கழகம் ஒருவரையும் நியமனம் செய்வர் என கூறப்பட்டுள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற தற்போது உள்ள விதிமுறை நீக்கப்படுகிறது.
மாநில உரிமைகளைப் பறித்து, ஆளுநர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதும், பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து நேரடியாக யுஜிசி மூலம் மத்திய அரசே அதிகாரங்களை எடுத்துக் கொள்வதும், கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைப்பதுடன் மாநில உரிமைகள் மீது நடத்தப்படுகிற அப்பட்டமான தாக்குதலாகும். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுகளுக்கு உரியது என்று திரு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொல். திருமாவளவன்
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என்றும், மத்திய பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி குறித்து மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்துக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானதாகும்.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனி சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாகவும் மத்திய அரசின் புதிய விதிகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே ‘லேட்டரல் என்ட்ரி’ என்ற பெயரில் மத்திய அரசில் அதிகாரம் மிக்க செயலாளர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் பின்வாசல் வழியாக பாஜக அரசு நியமனம் செய்துள்ளது.
இப்போது உயர் கல்வியை முழுமையாக சனாதன மயமாக்குவதற்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்று திரு தொல் திருமாவளவன் சாடியுள்ளார்.