“குடும்ப அரசியலை எதிர்த்துக் கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்றப் பார்க்கிறார் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.
“வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காகத் துரோகி எனச் சொல்லும் அளவுக்கு வைகோ துணிந்துள்ளார்,” என வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
மேலும், மல்லை சத்யாமீது வைகோ விமர்சனங்களை வைத்த நிலையில், அவர் மதிமுகவில் இருந்து வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அது எவ்விதத்திலும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது என்று வைகோ கூறியுள்ளார்.
இதற்கிடையே, மல்லை சத்யா தலைமையில் மதிமுகவுக்குள்ளேயே மற்றொரு அணி உருவாகி வருவதாகவும், திமுக, தவெக, பாஜக போன்ற மாற்றுக் கட்சியில் இணைவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் அது தொடர்ந்ததாகவே தெரிகிறது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகப் பூந்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் புகைப்படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மல்லை சத்யா குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மல்லை சத்யாவை என் உடன்பிறவாத் தம்பியைப் போல நடத்தி வந்தேன். ஆனால், அவரது சேர்க்கை சரியில்லை.
தொடர்புடைய செய்திகள்
“மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியைப் பாழ்படுத்தலாம் என்ற எண்ணத்தில் சிலர் வெளியேறினர். அவ்வாறு வெளியேறிய சிலருடன் மல்லை சத்யா நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார். மேலும், என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மோசமான விமர்சனங்களைப் பதிவிடுபவர்களுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்கள் எனக்கெதிரானவற்றைப் பதிவிடுகின்றனர்.
“இதற்குத் தக்க ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேபோல், பொது இடங்களில் அவர், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் என்றோ, என்னை மதிமுக பொதுச் செயலாளர் என்றோர் அவர் கூறுவதில்லை.
“கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். அது நிறைவேறவில்லை. இந்த விவகாரம் மதிமுகவுக்கு பெரிய சோதனையாக வரக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக நிர்வாகக் குழுவில் எடுத்துரைத்தேன்,” என்றார்.