தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதிப்பைக் கூட்டும் மதிப்பெண்கள்

4 mins read
4297eca2-6990-4330-95c3-c7fc4446a4f5
சுஹாசினி. - படம்: ஊடகம்
multi-img1 of 5

எண்ணில் இல்லை வாழ்க்கை....

எண்ணத்தில் இருக்கிறது!

மதிப்பெண்ணை நோக்கி பிள்ளைகளை விரட்டாதீர்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

ஆனால், இதெல்லாம் ஒரு பேச்சுக்கு இனிப்பாய் இருக்கலாம்.

ஆனால், நடைமுறையில் மதிப்பெண் என்பது பிள்ளைகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் நெம்புகோலாக இருக்கிறது.

அதேசமயம், பிள்ளைகளைப் ‘படி, படி’ எனத் துன்புறுத்திக் கொண்டே இருக்காமல், அவர்களைச் சுதந்திரமாக விட்டு, கண்காணிப்பை மட்டுமே பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

திருடன் கையில் சாவியைக் கொடுத்தால்... நம்பிக்கையின் நிமித்தம் அவன் திருட மாட்டான் என்று சொல்வார்கள்.

“மதிப்பெண் ஈட்டும் செயலைப் பிள்ளைகளிடமே கொடுத்தால், நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு கூடுதல் மதிப்பெண் பெற ஆர்வம் காட்டுவார்கள்,” என்பதும் மற்றொரு தரப்பின் விளக்கமாக உள்ளது.

அதுதான் 2025 - தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்டிருக்கிறது.

தேர்வு எழுதிய 7,92,494 மாணவ, மாணவிகளில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03% தேர்ச்சியாகும்.

3,73,178 மாணவர்களில் 3,47,670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.36 விழுக்காடு ஆகும்.

4,19,316 மாணவிகளில் 4,05,472 பேர் தேர்ச்சி. இது 96.70 விழுக்காடு.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இப்படிப் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்ட போதிலும், ஓரிரு வருத்தமூட்டும், நம்பிக்கையூட்டும், நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

தஞ்சை, பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான ஆட்டோ ஓட்டுநர் புண்ணியமூர்த்தி. இவரது இரண்டாவது மகள் ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.

“நான் சரியாகத் தேர்வு எழுதவில்லை. தேர்வில் தோற்றுவிடுவேன்,” என அடிக்கடி புலம்பி வந்த ஆர்த்திகா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தேர்வு முடிவு வெளியானது.

ஆனால், 413 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்திகா கௌரவமான வெற்றியைக் கைப்பற்றியிருந்தார்.

சுயமாக உயிரை விடுதல் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வல்ல. தன்னை நம்பாத இந்த மகள்.. இல்லாமல் போய்விட்டாளே என்று அவரது குடும்பத்தார் அழுது அரற்றுகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுஹாசினி. தன் ஊருக்கு வெளியே இருக்கும் முக்கியமான சாலையில் நின்று, அங்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறி வாணியம்பாடி மையத்தில் தேர்வு எழுதி வந்தார்.

கடந்த 25ஆம் தேதி இயற்பியல் தேர்வு. வழக்கம்போல் பேருந்துக்காக காத்திருந்தா’j.

பேருந்து வந்தது. மாணவி சீருடையில் இருப்பதைப் பார்த்தபிறகும்கூட பேருந்து நிற்காமல் சென்றது.

அடுத்த பேருந்துக்காகக் காத்திருந்தால் தேர்வுக்கு நேரமாகிவிடும் என்பதால் துணிந்து ஒரு முடிவை எடுத்த அந்த மாணவி, நிற்காமல் சென்ற பேருந்தை அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் துரத்திச் சென்றாள்.

ஒரு கட்டத்தில் பேருந்தினுள் இருந்தவர்கள், ‘உன் பிள்ளையாக இருந்தால் இப்படி நிற்காமல் போவாயா?’ என ஓட்டுநரையும் நடத்துநரையும் கடிந்துகொள்ளவே, பேருந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் மாணவி அதில் ஏறிச் சென்று சரியான நேரத்தில் தேர்வு எழுதினார்.

தன் வெற்றியைப் பெற துணிந்து பேருந்தின் பின்னால் ஓடி, இலக்கை எட்டிய மாணவி சுஹாசினியின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அந்தப் பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ் தற்காலிகப் பணிநீக்கமும், நடத்துநர் அசோக் குமார் நிரந்தரப் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

‘பொன்மனம்’ படத்தில் வடிவேலுவை, ‘வா.. செத்துச் செத்து விளையாடலாம்’ என வம்பிழுப்பார் நடிகர் முத்துக்காளை.

நிறைய படங்களில் நடித்திருக்கும் முத்துக்காளை, சினிமா ஆசை காரணமாக பள்ளிப் படிப்புடன் சென்னைக்கு வந்துவிட்டார்.

ஆனாலும், ஒரு பட்டப்படிப்பைப் படித்து முடியவில்லையே என்ற பல நாள் ஏக்கம் முத்துக்காளைக்கு இருந்தது. வாய்ப்பு அமைந்ததுமே, திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழ், இளங்கலை இலக்கியம் என மூன்று பட்டங்களை வென்றார் முத்துக்காளை.

‘இந்த வயதிலும் அப்பா ஏன் இப்படிப் படிக்கிறார்’ என வியப்புற்ற முத்துக்காளையின் மகன் வாசன் முரளி தன் தந்தையை முன்மாதிரியாகக் கொண்டு படிப்பில் முழுக் கவனம் செலுத்தினார்.

இந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார் முத்துக்காளையின் மகன் வாசன்முரளி.

கோவையைச் சேர்ந்த ராணிக்கு வயது 70. ஆனாலும் கல்வியின் மீது தீராக் காதல். இதனால் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை வீட்டிலிருந்தே படித்துத் தேர்வு எழுதி, 346 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி மாணவர் கீர்த்தி வர்மா, 12ஆம் வகுப்புத் தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் என்ன வியப்பு என்றால், இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி வர்மா. அவருக்காக நியமிக்கப்பட்ட உதவியாளரிடம் விடையைச் சொல்லி, தேர்வு எழுதியதன் மூலம் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.

‘அசுரன்’ படத்தின் இறுதிக்காட்சியில், தனுஷ் தன் மகனுக்குச் சொல்லும் ஒரு விஷயம், பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பாகவே கடத்தப்பட்டது.

“காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, ரூவா இருந்தா புடுங்கிக்கிடுவானுங்க, ஆனால், படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது” என்பதுதான் அந்த வசனம்.

ஆமாம்.. கல்வியின் மகத்துவம் அப்படி!

குறிப்புச் சொற்கள்