கோவை: இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டைக்கு அருகே உள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் புவியரசு. அவரது இயற்பெயர் சு.ஜெகன்னாதன்.
பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை பட்டம் பெற்ற கவிஞர் புவியரசு 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர் புவியரசு.
வானம்பாடி இலக்கிய இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அவர், 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்ட அவர், ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
அதேபோல் அவரது சில நூல்கள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம், இந்தி, ரஷ்ய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
நவீன நாடகங்களின் முன்னோடி எனப் பலரால் பாராட்டப்பட்ட கவிஞர் புவியரசு சிறந்த சொற்பொழிவாளருமாவார். திரைப்படத் துறையிலும் அவர் பங்களித்துள்ளார்.
அவர் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோவையில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனது வீட்டிலேயே அவர் காலமாகி விட்டதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
வங்கக் கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் ‘தி ரெவலூஷனரி’ என்ற நூலை தமிழில் ‘புரட்சிக்காரன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக 2007ஆம் ஆண்டும், ‘கையொப்பம் ‘ என்ற கவிதை தொகுப்புக்காக 2009ஆம் ஆண்டும் என இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றார் கவிஞர் புவியரசு.
அவர் எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல் 2004ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசை வென்றது.

