சென்னை: தமிழகத்தில் ‘வந்தே பாரத்’ ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய ரயில்பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது என்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ஒன்பது ரயில் வண்டிகளுக்கான பெட்டிகள் இவ்வாறு ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அந்தப் பெட்டிகளை மீட்டெடுத்து தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் பயன்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே துறைக்கு 20 வந்தே பாரத் ரயில் வண்டிகளுக்கான பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 8,700 பேர் கூடுதலாக பயணம் செய்திருக்க முடியும் எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
“தமிழகத்தில் பயன்படுத்தியிருக்க வேண்டிய வந்தே பாரத் ரயில்கள் பிறமாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு தெற்கு ரயில்வேத்துறையின் அலட்சியம் தான் காரணமாகும்.
“தமிழகத்துக்கு 20 வந்தே பாரத் ரயில்களை இயக்கத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றைப் பயன்படுத்தி எந்தெந்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கலாம் என்ற திட்டத்தை தெற்கு ரயில்வேத்துறை வகுத்திருக்க வேண்டும்.
“தமிழகத்தில் சென்னையிலிருந்து பெங்களூர், தூத்துக்குடி, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓராண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
“அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.