நீதிமன்றங்களில் ‘வந்தே மாதரம்’ பாடல்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்றங்களில் ‘வந்தே மாதரம்’ பாடல்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

2 mins read
5a9316d3-8a21-487f-b324-62e43af592a7
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக நீதிமன்றங்களில் கொடியேற்றப்படுவதற்குமுன் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: இந்தியாவின் 80வது சுதந்திர நாளை (ஆகஸ்ட் 15) முன்னிட்டு, நீதிமன்றங்களில் தேசியக் கொடியேற்றுவதற்கு முன்பாக தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக் கிளை மற்றும் அனைத்துக் கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுரை

‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு வழங்கிய அறிவுரையின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிகளில் முதலில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும். இறுதியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட வேண்டும் என ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குச் சான்றாக அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிகழ்ச்சியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினம் மற்றும் இதர முக்கிய தேசிய விழாக்களின்போது தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பு ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றப் பதிவுத்துறை மற்றும் அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்