தமிழக அமைச்சரவையில் முதன்முறையாக இடம்பெறும் விசிக, முஸ்லிம் லீக் கட்சியினர்

தமிழக அமைச்சரவையில் முதன்முறையாக இடம்பெறும் விசிக, முஸ்லிம் லீக் கட்சியினர்

2 mins read
91b5730c-298c-47c7-a29d-476864d67cfb
தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஷாஜஹான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு. - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

வியாழக்கிழமை மாலை முஸ்லிம் லீக் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக அறிவித்தன. இதனையடுத்து வெள்ளிக்கிழமை (மே 22) இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தோர் தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. இதையடுத்து அக்கட்சியினர் அமைச்சரவையில் அதிகாரபூர்வமாக அங்கம் வகிக்கின்றன.

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இரண்டு, விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். தொடக்கத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கிய இந்த இரு கட்சிகளும் தற்போது ஆட்சியில் அதிகாரம் பெற்றிருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றார். 

இந்நிலையில், அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல் கட்சியும் இடம்பெற வேண்டும் என்று தவெக அழைப்புவிடுத்தது. அதைப் பரிசீலித்த இரண்டு கட்சிகளும் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க, வன்னியரசு, ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகி இருக்கின்றனர்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி வழங்கக் கூடாது என்று இடதுசாரிகள், விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் அந்த 25 பேருக்கும் அமைச்சரவையில் இதுவரை இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
விசிகபாபநாசம்திண்டிவனம்ஆதரவு