சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலனுக்கும் சமூக நீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதன் அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
“சிறுபான்மையினர் பாதுகாப்பு, சாதிக் கொடுமைகளுக்கு எதிரான சட்டப் போராட்டமே இந்த அறிக்கையின் ஆன்மா,” என விசிக தலைமை தெரிவித்துள்ளது.
சென்னை தலைமை அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
திமுக தலைமையிலான கூட்டணியின்கீழ் விசிக எட்டு தொகுதிகளில் களம் காண்கிறது.
தேர்தல் அறிக்கை மொத்தம் 15 முக்கியக் கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குதல், பெண்களுக்கு அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு.
கல்வியை விலையில்லாமலும், மருத்துவத்தை மக்களின் அடிப்படை உரிமையாகவும் மாற்றுதல்.
தொடர்புடைய செய்திகள்
ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கவும் தனிச் சிறப்புச் சட்டங்கள் இயற்றப் போராடுதல்.
மது, போதைப்பொருள்களை முழுமையாக ஒழிக்கத் தீவிரப் பிரசாரங்களை முன்னெடுத்தல்.
காவல்துறை, சிறைத்துறையில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டு வருதல் உள்ளிட்டவை அவை.

