வீர மங்கை வேலு நாச்சியார் 295வது பிறந்த நாள்: தலைவர்கள் புகழஞ்சலி

2 mins read
1e609a73-e82b-4dec-af03-084e50a86b2b
சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்கள் வீர மங்கை வேலு நாச்சியாரின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். - படம்: எக்ஸ், SPK_TNCC

சென்னை: காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாகப் போர்க்களத்தில் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் (1730 - 1796). அவரது 295வது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) கொண்டாடப்பட்டது.

வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி, தலைவர்கள் பலர் புகழஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தினர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, ராணி வேலு நாச்சியாருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “துணிச்சல்மிக்கவர் ராணி வேலு நாச்சியார். அவரது 295வது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப்போர் நடத்தினார். சுதந்திரத்திற்காகவும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதற்கு தலைமுறைகளை ஊக்குவித்தார் வேலு நாச்சியார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை மேம்படுத்துவதில் அவரது பங்கு அளப்பரியது,” என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவர்களது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.

முன்னதாக, வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

“வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்,” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலேயரை வெற்றி கொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்ட வீரப்பெண்மணி வேலு நாச்சியார் (Velu Nachiyar), ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் 1730ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார்.

விஜயரகுநாத செல்லதுரை சேதுபதி மன்னரின் ஒரே மகள் இவர். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.

கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளையும் கற்றறிந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66வது வயதில் (1796) மறைந்தார். இவரது பெயரில் 2008ல் தபால் தலை வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்